சினிமா செய்திகள்

நடிகர் தனுஷ் நடிக்கும் D51 கான்செப்ட் போஸ்டர் வெளியானது!

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷின் புதிய படத்தின் கான்செப்ட் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், பிரபலங்கள் பலரும் சமூகவலைதளம் வாயிலாக தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பொதுவாக பிரபலங்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் வெகுசிறப்பாக கொண்டாடுவர். அந்தவகையில் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக அந்த பிரபலம் நடிக்கும் படத்தின் அப்டேட்களும் வெளியாகும்.

அந்தவகையில் இன்று நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அந்த டீசர் முழுக்க வெடிகுண்டு, துப்பாக்கி என அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படம் டிசம்பர் 15ம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.

இதையடுத்து கொண்டாட்டத்தில் நனைந்துள்ள ரசிகர்களை மேலும் குஷிப்படுத்த ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படமான D51 படத்தின் கான்செப்ட் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி நிறுவன பேனரின் கீழ் உருவாகும் ‘D51’ படத்தை தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கவிருக்கிறார்.

1999 ஆம் ஆண்டு ‘டாலர் ட்ரீம்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சேகர் கம்முலா, சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றவர் ஆவார். அதன்பின் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்போது தனுஷை வைத்து தெலுங்கில் ‘D51’ படத்தை இயக்கவிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான சார் (தமிழில் வாத்தி) படத்தின் மூலம் தெலுங்கில் தனி முத்திரை பதித்த தனுஷுக்கு, D51 இரண்டாவது தெலுங்குப் படமாகும்.

இந்நிலையில் இப்படம் குறித்து, தற்போது வெளியாகியுள்ள இந்த கான்செப்ட் போஸ்டரானது ஒருபுறம் பலஅடுக்கு மாடி கட்டிடமும், மறுபுறம் சிறு சிறு வீடுகளும் இருக்க, இந்த இரண்டிற்கும் நடுவே பழைய 100 ரூபாய் பணக்கட்டு அடுக்கப்பட்டு அதன் மீது D51 என்று அமையப்பெற்றுள்ளது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் இப்படத்தின் கான்செப்ட் போஸ்டரைப் பார்க்கும்போது, இப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு தரமான சம்பவமாக அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *