ஜாக்சன் துரை 2 பிரிட்டீஷ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
நடிகர் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் ஜாக்சன் துரை : 2ம் அத்தியாயம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு, தரணிதரன் இயக்கத்தில் வெளியான படம்தான் ‘ஜாக்சன் துரை’. இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ் நடிகக, காமெடி கலந்த ஹாரர் படமாக வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் தரணிதரன் அப்படத்தில் நடித்த சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘ஜாக்சன் துரை 2ம் அத்தியாயம்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ஐ ட்ரீம்ஸ் ஸ்டுடியோஸ், ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் கூட்டு தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சத்யராஜ், சிபிராஜ் இருவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியான நிலையில், நடிகர் சத்யராஜ் மிளிரும் சன்கிளாஸ் போட்டுக்கொண்டு பிரிட்டீஷ் அதிகாரி கெட்டப்பில் அசத்தியுள்ளார்.
ஜாக்சன் துரையின் இரண்டாவது அத்தியாயம், 2016 இல் வெளியான ஜாக்சன் துரை திரைபடத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் கதைக்களம் அமைவதாக கூறப்படும் நிலையில், சிபிராஜ் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு, கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைக்கும் நிலையில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
ஏற்கெனவே வெளியான ‘ஜாக்சன் துரை’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது ‘ஜாக்சன் துரை 2ம் அத்தியாயம்’ படப்பிடிப்பு முடிந்து எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.