இந்தி வர்ணனையாளராக களமிறங்கும் இஷாந்த் சர்மா!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் இஷாந்த் சர்மா. இவர் 2007ம் ஆண்டு மே மாதம் இந்திய அணி வங்காளதேச சுற்றுப்பயணம் செய்தபோது, இந்திய அணியில் இடம்பெற்ற முனாஃப் படேலுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அந்த வாய்ப்பு இஷாந்த் சர்மாவுக்கு வந்தது.
அன்று இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்தவர், தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடர், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான தொடர் என தொடர்ந்து பல வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வந்தார்.
2014ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இஷாந்த் சர்மா தனது அபராமான பந்துவீச்சால் 2வது இன்னிங்சில், இங்கிலாந்து அணியை திணறடிக்கச் செய்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெற உதவினார்.
இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 311 விக்கெட்டுகளையும், 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். அதேபோல், இந்தியாவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 2வது வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்து வருகிறார்.
இறுதியாக அவர் கான்பூரில் 2021ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
இந்நிலையில், தற்போது 34 வயதாகும் இஷாந்த் சர்மா, முதன்முறையாக வர்ணனையாளராக களமிறங்கவிருக்கிறார். தற்போது நடைபெறவிருக்கும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் இந்தி வர்ணனையாளராக செயல்படவிருப்பதாக கூறப்படுகிறது.
அதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியவர்களைப் பற்றியும், டெஸ்ட் குறித்தும் அவர் பேசவுள்ளதாக ஜியோ சினிமாஸ் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் ஓய்வுக்குப் பின்னரே பலரும் வர்ணனையாளராக செயல்பட்டாலும், சில வீரர்கள் ஓய்வுக்கு முன்னரே கமெண்ட்ரியில் செயல்பட்டுள்ளனர். அதன்படி, இதற்கு முன்பாக தினேஷ் கார்த்திக்கும் இதுபோல வர்ணனையாளராக செயல்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.