500வது போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி!
தற்போது நடந்துவரும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சர்வதேச போட்டிகளில் தனது 76வது சதத்தை பூர்த்தி செய்தார்.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் இருந்துவருபவர் விராட் கோலி.
இவர் 2008ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக தனது முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தாலும், 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகத்தான் தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார்.
இந்நிலையில் தற்போது தனது 500வது சர்வதேச போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகத்தான் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 438 ரன்களைக் குவித்துள்ளது. அணியின் வீரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றோர் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்த நிலையில், 4வது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடி சதமடித்து 121 ரன்களைக் குவித்துள்ளார்.
இவரது இந்த சதத்தின் மூலம், விராட் கோலி சர்வதேச போட்டிகளில் தனது 76வது சதத்தை பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல், டெஸட் போட்டியில் தனது 29வது சதத்தை அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.