மேற்கிந்திய அணிகளுக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய சாதனை படைத்த இந்தியா!
இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3வது ஒருநாள் போட்டியில் விளையாடிய நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றதோடு, இரண்டு புதிய சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது.
இதையடுத்து முதல் ஒருநாள போட்டியில் இந்தியாவும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்ற நிலையில், நேற்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதையடுத்து டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை எடுத்தது.
இஷான் கிஷன் 77, சுப்மன் கில் 85, சஞ்சு சாம்சன் 51, ஹார்திக் பாண்டியா 70 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே சற்று சறுக்கலை சந்தித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் இந்தியா அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் புதிய சாதனையும் படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2019ல் 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்துவந்தது.
இந்நிலையில், இப்போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது. அத்துடன் இன்னொரு சாதனையும் நிகழ்த்தியுள்ளது.
பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி 2006ம் ஆண்டு ஒருநாள் தொடரில் விளையாடிய நிலையில், 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
அதன்பின்னர் தொடர்ந்து இரு அணிகளும் ஒருநாள் தொடர்களில் மோதிவரும் நிலையில், ஒருமுறை கூட தொடரை இழக்காமல், தொடர்ந்து 13 ஒருநாள் தொடர்களையும் கைப்பற்றி இந்திய அணி சாதனையும் படைத்துள்ளது.