டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 22 வருட சாதனையை முறியடித்த இந்தியா!
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், 12.2 ஓவரில் 100 ரன்கள் எடுத்து புதிய வரலாற்று சாதனையும் படைத்துள்ளது.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
அதையடுத்து, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது- இதையடுத்து தற்போது 2வது டெஸ்ட் போட்டி நடந்துவந்தநிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் முன்னிலை வகித்தது.
பின்னர் 2வது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்யும் நோக்கத்துடன் விளையாடிவந்தது. நேற்று முன்தினம் 4வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் நேற்றைய கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுளளது.
இப்போட்டியில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சாதனையும் இந்தியா நிகழ்த்தியுள்ளது.
அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 12.2 ஓவர் என்ற குறைந்த பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக, 2001ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக இலங்கை அணி 13.2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்துவந்தது. இந்நிலையில் 22 வருடங்களுக்கு பிறகு இச்சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.